முதலில் இவ்வளவு தாமதமாக பதிவிடுவதற்கு தோழர் சம்சுதீன் ஹீரா என்னை மன்னிக்கணும். தாமதத்திற்கு காரணம் நேரமின்மை. தவிர சும்மா 4 வரியில் எழுத எனக்கு மனதில்லை. காரணம் அவ்வளவு அருமையான படைப்பிது. நடந்த சம்பவங்களை நாவல் பாணியில் எழுதியிருப்பது விறுவிறுப்பை இன்னும் கூட்டுகிறது. இவ்வளவு தூரம் இதை எழுதியிருக்கிறார் என்றால் இது எவ்வளவு பெரிய பயணமாக இருந்திருக்க வேண்டும் என்பது மலைப்பை கூட்டுகிறது.
எனக்கு முகநூல் தந்த முத்தான நல்ல நண்பர்களில் குறிப்பிடத்தகுந்தவர்தோழர் சம்சுதீன் ஹீரா https://www.facebook.com/samsu.deen3 கம்யுனிஸ்டாக அறிமுகமாகி, பிறகு அவரது பல முகங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றேன். அதில் மிக முக்கியமானது அவரது எழுத்து. என்னை மிகவும் கவர்ந்தது தோழரது எழுத்து நடையும், கவிதை புனையும் திறமையும். நான் மிகவும் ஆச்சரியப்பட்ட ஒன்று இதுக்கெல்லாம் இவங்க எப்படி நேரம் ஒதுக்கறாங்க என்பது... சரி தோழருக்கு அறிமுகம் தேவையில்லை என்றாலும், இதெல்லாம் என் உள்மனதில் வெகுநாட்களாய் சொல்ல நினைத்தவை, இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன்.
இப்படி ஒரு நண்பர் புத்தகம் எழுதியுள்ளார் என்பது எவ்வளவு சந்தோசத்தை கொடுத்தது என்பதை விவரிக்கமுடியாது. தோழரை தொடர்புகொண்டு புத்தகம் எங்கே கிடைக்கும் என்று விசாரித்து அறிந்து உடனடியாக புத்தகத்தை வாங்கிக்கொண்டேன். பொதுவாகவே எனக்கு புத்தகங்கள் வாசிக்க மிகவும் பிடிக்கும், அதிலும் வரலாற்று சம்பவங்கள் என்றால் கூடுதல் பிரியம்.
ஆரம்பம் முதலே விறுவிறுப்புதான், முதல் கவிதையே மிக சிறப்பான ஒன்று. இந்த புத்தகத்தில் குறிப்பிட தகுந்த அம்சம் தோழரது எழுத்து நடையும், காட்சிகளை விவரித்துள்ள முறையும்... நாம் சம்பவங்களை நேரில் காண்பது போல இருந்தது. சில இடங்களில், குறிப்பாக ஒரு வீட்டை விவரித்திருப்பார், அது நான் என் சிறு வயதில் வாழ்ந்த வீட்டை அப்படியே நினைவுபடுத்தியது. ஒவ்வொரு காட்சியும் வாசிக்கும் போது கண்முன் படமாக வந்து சென்றதே இந்த புத்தகத்தின் வெற்றிதான்.
ஒரு சிலர் புத்தகத்தை வாசிக்காமலேயே இது இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக எழுதப்பட்டதாக புரிந்துகொண்டுள்ளனர், அல்லது அவர்களுக்கு அப்படி திணிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. தோழரின் எழுத்துக்களை முன்பிருந்து வாசித்து வருபவர்களுக்கு தெரியும் அவர் இஸ்லாமில் உள்ள அடிப்படைவாதத்தினை எதிர்த்து எவ்வளவு எழுதியுள்ளார் என்பது. அப்படி அவர் ஒரு சார்பு நிலையில் எழுதியிருந்தால் இவ்வளவு விருவிருப்பாய் படிப்பவர்களுக்கு இருந்திருக்காது. இரு மதத்தவர் சார்பிலும் என்ன தவறு யார் செய்தனர் என்பதை சிறப்பாக சொல்லியிருக்கிறார். மனிதம் எப்படி மதமாக மாற்றப்படுகிறது, அது எந்த சூழலில் மீண்டும் மனிதமாக மாறுகிறது என்பதும் இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
பொதுவாக கோவை குண்டுவெடிப்பு சம்பவம் என்றே வரலாற்றில் பதியப்பட்ட இந்த கோர சம்பவத்தின் பின்னணி என்ன என்பது என் தலைமுறையிலேயே பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே எண்ணுகிறேன். அப்படியிருக்க அடுத்தடுத்த தலைமுறைக்கும் மறைக்கப்பட்ட வரலாற்றை எடுத்து சென்றிருக்கிறார். வாழ்த்துகள் தோழர்.. நீங்கள் இவ்வளவும் தெரிந்து எழுதாமல் இருந்திருந்தால் நீங்களும் மௌனத்தின் சாட்சியங்களாய் இருந்திருக்கக்கூடும். இப்போதுமௌனத்தின் சாட்சியங்கள் சத்தமாய் பேசிக்கொண்டிருக்கிறது.
இந்த புத்தகத்தில் குறிப்பிடத்தகுந்த மற்றொரு அம்சம் காகிதத்தின் தரம். முதலில் புத்தகம் பெரியதாக உள்ளதால் விலை சற்று கூடுதலாக இருக்கலாம் என்றெண்ணினேன். மாறாக புத்தகம் படிக்கும்போது அதுக்குள்ள முடிச்சிட்டாரே என்றே தோன்றியது. அதற்க்கு எழுத்துநடை காராமாக இருந்தாலும், ஒவ்வொரு பக்கம் திருப்பும்போதும் 2 பக்கங்களை திருப்பிவிட்டேனா என்று பார்த்துக்கொண்டே வாசித்தேன். அவ்வளவு தடிமனான காகிதம். இது ஒரு நல்ல படைப்பு என்பது அதன் அனைத்து பகுதிகளிலும் தெரிகின்றது. புத்தகத்தை வாங்கும்போதும், நூல் வெளியீட்டு விழாவின் போதும் பலமுறை தோழர்கள் திருப்பூர் குணா, பெரோஸ் பாபு மற்றும் சம்சுதீன் ஹீரா ஆகியோரை சந்திக்கும் வாய்பிருந்தும் சூழ்நிலை காரணமாக இயலவில்லை. பிறிதொரு சந்தர்ப்பத்தில் நிச்சயம் சிந்திப்போம் தோழர்.
மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள்.. இதுவரை புத்தகத்தை வாசிக்காதவர்கள் நிச்சயம் வாசியுங்கள்.. நன்றி..